சாலை போக்குவரத்து நிறுவனம்
ஓட்டுநர் பயிற்சிப் பிரிவு
கும்மிடிப்பூண்டி - 601 201
சாலைப் போக்குவரத்து நிறுவனம், சென்னை தமிழக அரசு நிறுவனமாகும். இந்நிறுவனம் 1979-ம் ஆண்டு தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டியில், பாதுகாப்பான மற்றும் திறமைவாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்குவதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்க ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை நிறுவியது. இப்பயிற்சிக்குக் குறைந்த பட்சத் தகுதிகள், வயது, கல்வி, இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிப் பிரிவு ஆண்டொன்றுக்கு 1,000 கனரக வாகன ஓட்டுநர்களை உருவாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதுநாள் வரை மொத்தம் 62,055 ஓட்டுநர்களை உருவாக்கியுள்ளது.
மேலும், பணியிலுள்ள போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்துடன் வாகனம் ஓட்டுவது பற்றிய சிறப்புப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியப் பணியாக உள்ளது.
தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகும் ஓட்டுநர்களுக்கு விபத்துத் தவிர்ப்பு ஆலோசனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்
ஓட்டுநர் பயிற்சி மைதானம்
இப்பயிற்சிப் பிரிவு சுமார் 55 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக
15 ஏக்கர் நிரப்பரப்பில் சுமார் 26 லட்சம் ரூபாய் செலவில் 1986-ம் ஆண்டு ஓட்டுநர் பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைகள்
பாடங்கள் நடத்துவதற்காக 7 வகுப்பறைகள் தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. டி.வி., வீடியோ,
ஸ்லைடு புரொஜக்டர் போன்ற நவீன சாதனங்கள் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் எளிதில் புரியும் படியும்,
நினைவில் நிற்கும்படியும் போதிக்கப்படுகின்றன.
பயிற்சிக் கூடம்
மாதிரி வாகனங்களும், வாகனத்தின் முக்கிய பாகங்களின் வெட்டுத் தோற்றங்களும் பல்வேறு அமைப்புகள் செயல்படும்
நிலைகளுடன் அடங்கிய பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வாகனங்கள்
6 பேருந்துகள் பயிற்சிக்கென நல்ல நிலையில் ‘டுயல் பிரேக்’ வசதிகளுடன் உள்ளன.
தொழிற்கூடம்
பயிற்சி வாகனங்களைப் பராமரிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் தனியாக தொழிற்கூடம் உள்ளது.
பணியாளர்கள்
சுமார் 25 பணியாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இவர்களில் 10 நபர்கள் வாகனம் ஓட்டும் கலையில் அனுபவமும்,
நல்ல தேர்ச்சியும் பெற்ற ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் ஆவர்.
பரிசோதனைக் கருவிகள்
உடல் நலத் தகுதி மற்றும் கண் பரிசோதனைக் கருவிகள் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் ஜப்பான், இங்கிலாந்து
போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
விடுதி
250 மாணவர்கள் தங்குமளவு வசதி கொண்ட விடுதியில் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுகிறார்கள்.
உணவகம்
மாணவர்களின் நன்மை கருதி சுகாதாரமான முறையில் உணவு விடுதி ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
குடியிருப்பு
பணியாளர்கள் தங்குவதற்காக சுமார் 12 குடியிருப்பு வசதியும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளது.
நூலகம்
மாணவர்களின் நலனுக்காக சுமார் 2000 புத்தகங்கள் அடங்கிய நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள்
மாலை நேரங்களில், பயிற்சியாளர்களின் பொழுதுபோக்கிற்காக, உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற
வசதிகள் செய்யப்பட்டுள்ளன.